சென்னை அண்ணா நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் தாமஸ் ராஜன் (69). இவர் சுங்க அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் கதவைத் தட்டும், சத்தம் கேட்டு, வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர், தலைக்கவசத்துடன் நின்றுள்ளார்.
அந்த நபரை மேலும், கீழுமாகப் பார்த்த தாமஸ் ராஜன், 'யார் வேண்டும்' எனக் கேட்டுள்ளார். அதற்கு, சிக்கன் டெலிவரி செய்ய வந்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
'தான் சிக்கன் ஆர்டர் செய்யவில்லை' என தாமஸ் கூறியுள்ளார். உடனே அந்த நபர் இந்த வீட்டிலிருந்துதான் ஆர்டர் வந்தது, கிக்கனை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். பின்னர், கோபமடைந்த அந்த நபர் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தை, ஓங்கி வீட்டின் கதவில் அடித்துள்ளார்.
இதனால் தாமஸ் ராஜன் அந்த நபரைத் தாக்கியுள்ளார். உடனே அந்த நபர் தான் கையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து, தாமஸின் காலில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் காயம் ஏற்பட்டு தாமஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து தாமஸ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த அடையாளம் தெரியாத நபரைத் தேடிவருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்!