சென்னை: தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுறக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது “தமிழக நாட்டுப்புற இசை கலை பெருமன்றத்தின் சார்பில், நலிவற்ற நிலையில் வாழும் ஆயிரம் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி மற்றும் ஆடை அணிகளுடன் இசைக்கருவிகள் வாங்கிட 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
கோரிக்கைகள்: நலிவுற்ற நிலையில் வாழும் 500 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மூவாயிரம் மாதாந்திர நிதி உதவித் தொகையினை ஆண்டுதோறும் ஆயிரம் கலைஞர்களுக்கு வழங்கிட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்க வேண்டிய மாவட்ட கலை விருதுகளை, உதவிகளை மற்றும் சலுகைகளை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்து வரும் கலை பண்பாட்டுத் துறை உரிய நேரத்தில் நலத்திட்டங்களை வழங்கிடவேண்டும்.
கலை பண்பாட்டுத்துறை பஜனை பாட்டு, பேஸ் ட்ரம் சைடு, டிரம், கோலாட்டம், பாரம்பரிய கும்மியாட்டம், சிலம்பாட்டம் ஆகிய கலை பிரிவுகளைச் சார்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் நிதி உதவி வழங்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் மீது பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தியின் செயல்பாடு ஏற்புடையது அல்ல.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தனக்கு கமிஷன் தரும் கலைஞர்களுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்பு வழங்கி வரும் ஹேமநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹேமநாதன், கலை பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குனர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விருதுகள் மற்றும் சலுகைகளை, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறார். இது குறித்து உடனடியாக நடவடிகை எடுத்திட வேண்டும். மேலும் இதற்கென அனுபவம் வாய்ந்த தகுதியான கலைஞர்கள் அடங்கிய தேர்வுக் குழுவை அமைத்து, மாவட்ட கலை விருதுகள் வழங்க வேண்டும்.
கலைஞர்களுக்கும் கிடைக்க விடாமல் ஒரு சங்கத்தின் தலைவர்போல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி வரும் அதிகாரிகளை, உடனடியாக துறை மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டுப்புற கலைஞர்களால் நடத்தப்பட்டது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால், கலைஞர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை கலை பண்பாட்டுத் துறையில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம்” எனத் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டுப்புறக் கிராமிய கலைகளான நையாண்டி, மேளம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உரித்தான முறையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: மிசோரம் சட்டமன்றத் தேர்தல் 2023; வாக்குப்பதிவு தொடங்கியது!