சென்னையை ஒட்டியுள்ள கடற்கரைப்பகுதி பட்டினப்பாக்கம். மீனவர்கள் மிகுதியாக வாழும் இப்பகுதியில், கடந்த சிலநாட்களாக கடற்கரை முழுதும் நுரை நிறைந்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பஞ்சு மூட்டைகளை பிரித்து கொட்டியதுபோல் பெரிய அளவிலான நுரைப்பஞ்சுகள் கடற்கரைப்பகுதி முழுதும் பரவிக்கிடக்கிறது. கடலிலிருந்து வெளியேற்றப்படும் இந்த நுரை, காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர். அலைகள், நுரையை வெளியேற்றுவது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளதாகவும், ஆனால், தற்போது நுரை வெளியேறிவருவது அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி தொழிலும் செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, கடல் தனக்குள் சேரும் கழிவுகளை அலையினூடாக வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது. அதைப்போலவே, இந்த நுரைவெளியேற்றம் இருந்திருக்கலாம் என்றிருந்தாலும், சாதாரணமாக இருந்தக் கடலில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அப்பகுதியினரை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
கடல் மாசு அல்லது ரசாயனம் கடலில் கலந்திருந்தால், இதுபோன்ற நுரைகள் வெளியேற வாய்ப்புள்ளதாக சூழலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தகவலை அறிந்ததும் பட்டினப்பாக்கத்திற்கு வந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நுரையின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இவ்விடத்தில் கடல் நீரோடு அடையாற்று நீர் கலப்பதால், அதில் ஏதேனும் மாசு கலந்திருந்தால் கூட இதுபோன்ற நுரையை கடல் வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும், இருப்பினும் ஆய்வில்தான் காரணம் தெரிய வரும் என்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எது எப்படியோ, கடலை நம்பியே வாழ்க்கை நடத்தும் மீனவமக்களின் பயத்தை போக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
இதையும் படிங்க: கனமழையால் சேலம் விவசாயிகள் வேதனை! - ஏன் தெரியுமா?