சென்னை: கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் தென் சென்னை பகுதியில் மழை பாதிப்பு நிலவரம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். செம்மஞ்சேரி பகுதியில் 23.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி வெள்ள தடுப்பு பணிகளுக்காக ஒட்டியம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்படும் கால்வாய் பணிகளை அவர் பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக சோளிங்கநல்லூர் பள்ளிக்கரணை மடிப்பாக்கம் புழுதிவாக்கம் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை பகுதியில் 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் கூட வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. உதாரணமாக கடந்த காலங்களில் செம்மஞ்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது செம்மஞ்சேரியில் எந்த பகுதியிலும் வெள்ள நீர் தேங்க வில்லை என சுட்டிக்காட்டினார்.
கடந்த சில தினங்களாக பெய்த மழையில் அதிகபட்ச மழை வட சென்னை பகுதியில் பெய்திருப்பதால் அந்தப் பகுதியில் திருவிக நகர் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே வெள்ளநீர் தேங்கி இருந்தது. அதற்கும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை அரசு மருத்துவமனை அருகே நிரம்பிய குப்பைத்தொட்டி - நோய்ப்பரவும் அபாயம்