தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அண்ணா நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மஞ்சள் அலர்ட்
இதனிடையே, தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாகவும், இன்றும் (அக்.29), நாளையும் (அக்.30) மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.
மழை நிலவரங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னையில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பொழிந்துள்ளது. சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் சில மணி நேரங்களில் வெளியேறிவிடும். எந்த ஒரு நகரமும் இந்த அளவு அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கடினம் தான். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஈடிவி பாரத்திடம் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதீப் ஜான், தற்போது பெய்யும் மழை 2015ஆம் ஆண்டு போல் இல்லை. அந்த ஆண்டு மண்ணின் தன்மை மிகவும் ஈரப்பதமாக இருந்தது, மேலும் இறுதியான மழை பொழிவு அது. தற்போது பெய்து வருவது முதல் கட்ட மழை. புழல் ஏரி தவிர மற்ற பகுதிகளில் மழை அளவு குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்