கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று காரணமாக, சென்னை விமான நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தினந்தோறும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்துசெய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு 392 விமானங்கள் இயக்கப்பட்டுவந்த நிலையில், இன்று 162 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அந்தமான், அஹமதாபாத், லக்னோ, கோவா, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 81 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணிப்பதால், சில விமானங்கள் ரத்தாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே, விமான நிலையத்தில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு நடைபெற்றுவருகிறது. பயணிகள் அனைவரையும் விமான நிலைய சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனைசெய்து அனுப்புகின்றனர். மத்திய அரசு இன்றிலிருந்து வரும் 29ஆம் தேதி வரை இந்தியாவில் சா்வதேச விமானங்கள் இயக்கத்திற்கு தடைவிதித்துள்ளதால், 114 விமானங்களும் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவிற்கு சென்னையிலிருந்து செல்லவேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், இயந்திரக்கோளாறு காரணமாக நேற்று ரத்துசெய்யப்பட்டது.
இந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் 289 பேரும் சென்னை உணவகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். விமானத்தின் பழுதை நீக்கிய பின்பும், மத்திய அரசு தடை காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, இன்று அதிகாலை 2.15 மணியளவில் சென்னை சா்வதேச முனையத்திலிருந்து தோகா புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!