சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், இன்று (ஏப்.11) அதிகாலை 4 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 182 பயணிகள் செல்லவிருந்தனர். அவா்கள் அனைவரும் அதிகாலை ஒரு மணிக்கு முன்பாகவே சென்னை விமான நிலையம் வந்து அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறத் தயாராக இருந்தனா்.
அப்போது, விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு இயந்திரங்களை சரிபாா்த்த விமானி, விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதையும், இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்து என்பதையும் அறிந்தார். இதையடுத்து விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலும் அளித்தார். தொடர்ந்து, விமானப் பொறியாளர்கள் குழுவினர் அங்கு விரைந்து வந்து விமானத்தை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக பயணிகள் அனைவரும் ஓய்வுக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
ஆனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகவும், காலை எட்டு மணி வரை விமானத்தை சரி செய்ய முடியாததால் பயணம் ரத்து செய்யப்பட்டு, இன்று இரவு விமானம் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக விமானத்தில் பயணம் செய்யவிருந்த 182 பயணிகளும் சென்னையில் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.