சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவ.29) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. காலை 9 மணியிலிருந்து பகல் 1 மணி வரையில் சுமார் 22 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன. அதேப்போல் 5 வருகை விமானங்களும் தாமதமாக வந்தன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதம் ஆகின. அந்த வகையில் சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, தோகா ஆகிய 4 சர்வதேச விமானங்கள், அந்தமான், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, கோவை, சேலம், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், சிலிகுரி, வாரணாசி, பெங்களூர் உள்ளிட்ட 18 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இந்த விமானங்களின் தாமதத்துக்கு காரணம், விமானங்களில் பயணிக்க வேண்டிய பெருமளவு பயணிகள், மழை காரணமாக தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததே. மேலும், விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் உட்பட பொறியாளர்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, விமானங்களில் சரக்குகள் ஏற்றுவது, பயணிகளுக்கு விமானங்களில் கொடுப்பதற்கான உணவுப் பொருட்களை ஏற்றுவது உள்ளிட்ட தாமதம் காரணமாகவும் சென்னையில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்களில் சிங்கப்பூர், கோலாலம்பூர், டெல்லி, அந்தமான் உள்ளிட்ட 5 விமானங்கள் தவிர, மற்ற அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் வந்து தரை இறங்கின. இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “சென்னைக்கு வரவேண்டிய விமானங்களில் ஒரு சில விமானங்கள் தாமதம் ஆகின. அந்த விமானங்கள் புறப்படும் இடங்களிலேயே தாமதமாக புறப்பட்டதால், சென்னைக்கு தாமதமாக வந்தன.
அதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதத்துக்கு காரணம், மழை காரணமாக பெருமளவு பயணிகள் தாமதமாக விமான நிலையம் வந்ததும், விமான ஊழியர்கள் வருகையில் ஏற்பட்ட தாமதமும், மழையால் விமானங்களில் பயணிகளின் லக்கேஜ்களை ஏற்றுவதில் ஏற்பட்ட சிரமமும் தான் காரணம். ஆனால் பெரிய அளவில் தாமதம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையை முடக்கிய கனமழை..! மழைநீரால் தத்தளிக்கும் தாம்பரம் - வேளச்சேரி சாலை!