சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் பெய்த திடீர் கனமழையால் தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (செப்டம்பர் 7ஆம் தேதி) பகல் முழுவதும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் இரவு 8:30 மணியில் இருந்து நள்ளிரவு வரை, கனமழை, லேசான மழையுமாய் மாறி பெய்து கொண்டு இருந்தது. அதோடு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றும் இருந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் , சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணம் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: சனாதனம் குறித்து உதயநிதி சர்ச்சை.. சேகர்பாபுவை கண்டித்து பாஜக போராட்டம் நடத்த திட்டம்.. ஆளுநரிடம் புகார்.. என்ன நடக்குது
அதனைத்தொடர்ந்து, கண்ணூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து, வானிலை ஓரளவு சீரடைந்த பின்பு தாமதமாக சென்னையில் தரை இறங்கின.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான கோலாலம்பூர் விமானங்கள் 2, மற்றும் துபாய், குவைத், சிங்கப்பூர் ஆகிய 5 சர்வதேச விமானங்கள் மற்றும் 2 மும்பை விமானங்கள், 2 ஹைதராபாத் விமானங்கள் மற்றும் ஜெய்ப்பூர், பெங்களூர், ஆகிய 6 உள்நாட்டு விமானங்கள், மொத்தம் 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரியும் 5 விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து புறப்படும் 11 விமானங்கள் என மொத்தம் 16 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதில் ஒரு விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், விமான சேவைகள் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
இதையும் படிங்க: ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு... "விரைவில் தூத்துக்குடி மக்ரூன், விளாத்திகுளம் குண்டு மிளகாய்க்கும் கிடைக்கும்" - கனிமொழி!