சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் 142 பயணிகளுடன் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தின் இயந்திரங்களை பொறியாளர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் 4 மணி நேரத்திற்கு மேலாக, 142 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 142 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று (அக்.08) காலை 10:05 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக 142 பயணிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் காலை 8:30 மணிக்கு முன்னதாகவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குச் சென்று பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, தயார் நிலையில் இருந்தனர்.
டெல்லியில் இருந்து காலை 8:50 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் தான் மீண்டும் டெல்லிக்கு காலை 10:05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதைப்போல் அந்த விமானம் சென்னை வந்ததும் டெல்லிக்குச் செல்ல வேண்டிய 142 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
அதன்பின்பு விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரி பார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து, தொடர்ந்து இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தினார். அதோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் அது நிற்க வேண்டிய இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி இயந்திரக் கோளாறு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம் தாமதமாக காலை 11:30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்யப்படாததால் பகல் 12:30க்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், விமானம் புறப்படவில்லை. 142 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு வானில் பறக்க தொடங்குவதற்கு முன்னதாகவே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறுகளை விமானி கண்டுபிடித்து உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 142 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
இதையும் படிங்க: “அந்த வசனத்திற்கு நானே பொறுப்பு” - லோகேஷ் கனகராஜ்!