சென்னை: மாண்டஸ் புயல் (mandous cyclone) நெருங்கிக் கொண்டிருக்கும் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், இன்று (டிச.9) அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 00.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஜெட் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும்ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதை போல் இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:50 மணிக்கு கடப்பாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எச்சரிக்கை: திருவள்ளூரில் புயல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு!