சென்னை பம்மல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக சங்கர் நகர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பம்மல் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பான்மசாலா, குட்காவை ஒருவர், சப்ளை செய்து வந்ததை காவல் துறையினர் பார்த்தனர். பின்னர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்த காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் மீனாகுமார் எனத் தெரிய வந்தது.
மேலும், மீனாகுமார் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் பம்மல் பகுதியைச் சேர்ந்த சுடலை மணி(48), பூவலிங்கம் (50), சண்முகசுந்தரம் (45) மற்றும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (32) ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 200 கிலோ பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் தீ வைத்து எரிப்பு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு!