சென்னை: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு(PFI) சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்பினருக்குத் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட சில அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. இந்தியாவில் 2047ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய விதிகளை அமல்படுத்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு ஆயுதங்கள் கையாள்வது - நிதி வசூலில் ஈடுபடுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பிஎப்ஐ நிர்வாகிகள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்று(மே.9) சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 6 இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், கூர்மையான ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது யூசுப், முஹம்மது அப்பாஸ், திண்டுக்கல்லைச் சேர்ந்த கைசர், தேனியைச் சேர்ந்த சாதிக் அலி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், பிஎப்ஐ குற்றவியல் சதி வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: NIA Raids: பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் கைது?