சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி முகப்பேர் சாலையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (29). இவரது நண்பர் சுரேஷ் (27). இவர்கள் இருவரும் சரவணன் என்பவரிடம் தண்டலுக்கு பணம் வசூல் செய்யும் ஊழியர்களாக வேலை செய்துவருகிறார்கள். இதற்கிடையில், கடந்த செப். 4 ஆம் தேதி மாலை பாலகிருஷ்ணன், சுரேஷ் இருவரும் தண்டல் பணத்தை வசூல் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.
பின்னர், இவர்கள் இருவரும் வீட்டிலிருந்தபோது, திடீரென ஐந்து இளைஞர்கள் முகத்தை மூடியவாறு வீட்டுக்குள் புகுந்து பாலகிருஷ்ணன், சுரேஷ் ஆகிய இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், நான்கு செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர்.
இது குறித்து பாலகிருஷ்ணன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டது, கோயம்பேட்டைச் சேர்ந்த சரண் (23), ரஞ்சித் (27), அண்டனி (24), மாங்காட்டைச் சேர்ந்த இருதயராஜ் (33), சின்மையா நகரைச் சேர்ந்த திருமுருகன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கொள்ளை கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அனுமதியின்றி கருங்கற்கள் ஏற்றிவந்த வண்டி: மடக்கிய கோட்டாட்சியருக்கு போக்குகாட்டிய ஓட்டுநர்!