சென்னை: நாட்டில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு கருதி சென்னை துறைமுகம் பகுதி முதல் பெசன்ட் நகர் வரை உள்ள 5 கடல் மைல் தொலைவு கடற்பரப்பில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் "ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தமிழக முதலமைச்சர் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி வைக்க உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரையிலான கடல் பகுதியில் கரையில் இருந்து கடலுக்குள் 5 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் தலைநகராக மாறுகிறதா டெல்லி? - மகளிர் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
மேலும், இது தொடர்பாக சென்னை - செங்கை மீன்பிடி தொழிற்சங்கக்த்தினர் கூறியதாவது, "மீன் வளர்ச்சி, புயல், மழை, இயற்கை சீற்றங்கள் ஆகிய காரணத்தால் மீன்பிடிக்க தடையை நியாயப்படுத்தலாம். ஆனால், இதில் எவ்வித பொருத்தமும் இல்லாமல் முதல்வர் கோட்டையில் கொடி ஏற்றும்போது சென்னை மீனவர்கள் 5 நாட்டிகல் மைல் (9-10 கிலோ மீட்டர்) வரை மீன் பிடிக்க தடை விதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்றால், கடலோரக் காவல் படை பலவீனமாகி விட்டதா என்ற கேள்வி எழுகிறது. அதிகாலையில்தான் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்கின்றனர். அந்த நேரத்தில் தடை விதிப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்” என்றார்.
மேலும், “கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப் பிறகு, தமிழகத்துக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற முக்கிய நபர்கள் வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கை என்று கருதி மீன்பிடிக்கத் தடை விதிப்பது வழக்கமாகி விட்டது.
முக்கிய பிரமுகர், மிக முக்கிய பிரமுகர் (VVIP) விமானம் மூலம் வந்து சென்றாலும் கூட கடல் பகுதியில் மீன்பிடிக்க தேவையின்றி தடை விதிக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒரு நிரந்தர முடிவு காண முன் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!