தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 673 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால், சர்வதேச விமான போக்குவரத்துச் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இதனால், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இதையடுத்து, மீனவர்களின் குடும்பங்கள் சார்பில் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்டுத்தருமாறு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மீனவர்களை மீட்குமாறு அரசை வலியுறுத்தினர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரானில் உள்ள மீனவர்களை விரைவில் தமிழ்நாட்டுக்கு அழைத்துவர உதவுமாறு ஈரான் நாட்டுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அலுவலர்கள் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் கிடைக்க உதவி செய்தனர்.
இந்நிலையில், ஈரானில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 673 மீனவர்களை தாயகம் அழைத்துவர பிரத்யேக கப்பல் இன்று (ஜூன் 25) புறப்படவுள்ளதாகவும், இந்தக் கப்பல் மூலம் மீனவர்கள் அனைவரும் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள் எனவும் தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.