சென்னை, பெரம்பூரில் உள்ள ஜமாலியா பகுதியில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை இன்று (05-06-2020) வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மின்சாரக் கட்டணம் தொடர்பாக மின் வாரியம் விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மக்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டண வழிமுறைகள், சுகாதாரத் துறை சார்பாக விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சாதாரண இருமல், காய்ச்சலுக்குக்கான கட்டணம், தொற்று பாதிப்பிற்கு தகுந்தார் போல் கட்டணம் என சுகாதாரத் துறை அமைச்சர் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதேபோல் தனியார் மருத்துவமனையில் 25 சதவிகித படுக்கைகள், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை ஆகிய முன்னெடுப்புகள் வரவேற்கத்தக்கவை. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உடல்நிலை பற்றிய தகவலை முதலமைச்சர் கேட்டறிந்தது அரசியல் நாகரிகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக அரசு யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை. திமுக வேண்டுமானால் எங்களை எதிரியாக நினைக்கலாம். நாங்கள் அவ்வாறு நினைக்க மாட்டோம். அன்பழகன் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும்.
தவிர, சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்