சென்னை காசிமேட்டில், நிவர் புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "நிவர் புயல் வலுவிழந்து கரையை கடந்த நிலையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகத்தில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி முழுவதும் சேதமடைந்துள்ளன. அந்த படகுகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்ட பின் கருத்து கணிப்பு பணிகள் முடிவுகளை அரசு பெற்ற பின்னர் தான் எவ்வளவு படகுகள் சேதமடைந்துள்ளன என்பது தெரியும்.
அதன் பிறகே நிவாரணம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி தளங்களை ஒன்றிணைத்து காப்பீடு செய்தால் படகு உரிமையாளர்களுக்கு காப்பீடு தொகை குறையும். அரசின் நல்ல செயல்பாடுகளை மக்களிடம் மறைக்கும் வண்ணமாக எதிர்க்கட்சியினர் அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை பாராட்டுவார்கள். ஆனால், இங்கு மு.க.ஸ்டாலின் எங்களின் நல்ல நடவடிக்கையை பாராட்ட மனமில்லாமல் அறிக்கை விட்டு வருகிறார். தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லாமல் அறிக்கை வெளியிடுவதையே குறிக்கோளாக திமுக செய்து வருகிறது.
தவளை போன்ற குறுகிய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின். அவருக்கு பரந்த மனப்பான்மை கொண்ட எண்ணம் இல்லை. திமுகவினருக்கு மீனவர்களை எப்பொழுதும் பிடிக்காது. மீனவர்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு எந்த நலத் திட்டத்தையும் திமுக செயல்படுத்தாது. மீன்பிடி தொழில் என்பது வேட்டையாடுவது போன்றது. எல்லை பாராமல் வேட்டையாடும் தொழிலை மீனவர்கள் செய்து வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க:’அமித் ஷா தமிழகம் வருவது பாஜகவை பலப்படுத்தவே’ - அமைச்சர் ஜெயக்குமார்