தமிழ்நாடு மீன்வளத்துறைக்கென தனியே சட்ட அமலாக்கப் பிரிவு புதிதாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இதில் ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 10 காவல் துறை ஆய்வாளர்கள், 8 உதவி காவல் துறை ஆய்வாளர்கள், 53 காவலர்கள், 17 காவல் துறை ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 112 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் பணியாற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு, புதிதாக 19 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மீன்வளத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நேற்று காவல் துறை அலுவலர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கே. கோபால் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காற்றிலே ஊழல் செய்த கும்பல் திமுக. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. அதனால்தான் எல்லாமே அவர்களுக்கு ஊழலாக தெரிகிறது. பிரசாந்த் கிஷோரின் அறிவுரையின் பெயரில் திமுக பொய் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறது.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் அறிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, அந்த ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராவதும், செல்லாமல் இருப்பதும் அவருடைய விருப்பம், அரசு இதில் தலையிட முடியாது.
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கி, பாதுகாப்பான மாநிலம் என்ற விருதை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. ரஜினி மட்டுமின்றி யார் வந்தாலும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘பொதுமக்கள், வணிகர்களை கொடுமைப்படுத்தும் பெண் நகராட்சி அலுவலர்’