சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (பிப்.14) செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, "தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இன்று முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்கள் வரும் பிப்.18ஆம் தேதி வரை வகுப்புகளில் சேர்த்துக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பீதியடையத் தேவையில்லை. இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதலில் அறிமுக வகுப்புகள் மட்டுமே தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
பெற்றோர், மாணவர்களிடம் பெறப்பட்ட கோரிக்கையின் படி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 2ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு முடிவுகள் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் 2ஆம் கட்ட கலந்தாய்வு மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது.
மாணவர் சேர்க்கை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் இதுவரை 541 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மூன்று மாணவர்கள் இன்னும் சேரவில்லை, அது குறித்து விசாரிக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு குறித்து கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் காவல்துறை உதவியுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவரின் படிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் தனிப்பட்ட முறையில் அணுகும் பட்சத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு ஒருவாரம் வரை கால அவகாசம் பெற்று தரப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்தால் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரையின்படி தற்பொழுது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தாமதமாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினை சந்தித்த நாகலாந்து அமைச்சர்!