சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் காலை முதலே பட்டாசுகள் வெடி சத்தம் விண்ணைப் பிளந்தது.
காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், எவ்வித உத்தரவுகளையும் கடைபிடிக்காமல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை இடைவிடாமல் சென்னையின் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
இரவு நேரங்களில் வெடிக்கப்பட்ட வான வேடிக்கைகள் இரவை பகலாக்கின. இருப்பினும், அரசு வழிகாட்டிய உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் பல்வேறு இடங்களில் தீ விபத்துகளும் நேரிட்டன. குறிப்பாக, மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயணைத்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர் மார்க்கெட் பகுதியில் தார்ப்பாய் விற்பனையகத்தில் பட்டாசு பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீ மள மள என பரவி, அருகில் இருந்த 30-க்கும் அதிகமான கடைகளில் தீப்பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இதேபோல், பழைய வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியார் தெருவில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதே போன்று சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 148 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!