சென்னை புதுப்பேட்டை வீரப்பத்திரன் தெருவைச் சேர்ந்தவர் ரவி (48). இவர் அதே பகுதியில் உள்ள ஆதித்தனார் சாலையில் 'யூசுப் ஆட்டோ ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்றிரவு விற்பனை முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அவரது கடையிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த சாகுல் ஹமீது என்பவர் கடை தீப்பிடித்து எரிவதைப் பார்த்துள்ளார். உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து ரவியும் அங்கு வந்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், கடையிலிருந்த 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
![இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-fire-script-7202290_18012020093847_1801f_1579320527_129.jpg)
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும் யாராவது வேண்டுமென்றே கடையில் தீ வைத்து நாசவேலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் எழும்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கடையை காலி செய்வது குறித்து நீண்ட நாட்களாக உரிமையாளருக்கும், ரவிக்கும் இடையே பிரச்சனை நிலவிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு