சென்னை: காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இன்று(மே 10) சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். இதில் இணையவெளி குற்றங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க இணைய எச்சரிக்கை செயலி மற்றும் இணையப் பாதுகாப்பு முகப்பு உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, துரைப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் 70 மீட்டர் உயரம் செல்லக்கூடிய வான் நோக்கி நகரும் ஏணியுடன் கூடிய நவீன தீயணைப்பு மீட்பு வாகனம் 60 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
இரவுப் பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவுநேர ரோந்துப்பணிக்கு செல்லும் அனைத்து காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதம் ரூபாய் 300 வழங்கப்படும்.
இணையவழி சூதாட்ட மரணம் - சிறப்புக் குழு அமைப்பு: காவலர்களுக்கு வாரம் விடுமுறை அளிக்கப்படுவது போன்று உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிக்கப்படும். இணையவழி சூதாட்டத்தில் பங்கேற்று தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்களின் காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யானைகள் கண்காணிப்பு பணி: வேட்டை தடுப்பு காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?