சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தாம்பரம் மாநில பயிற்சி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் 137-வது அணி புதிய தீயணைப்பு படை வீரர்கள் அடிப்படை பயிற்சி தொடங்கி மூன்று மாதங்கள் நடைபெற்றது. இந்த மூன்று மாத காலத்தில் தீயணைப்பு துறை சார்ந்த அடிப்படை பயிற்சிகளான தடை தாண்டும் பயிற்சிகள், ஆழ்கடல் நீச்சல் மற்றும் கயிறுகள் மூலம் மீட்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பயிற்சியை நிறைவு செய்த 120 புதிய தீயணைப்பு படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது. தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார், வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாநில பயிற்சி மைய இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேட்டி அளித்த தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் கூறுகையில், “பயிற்சி பெற்ற அனைத்து தீயணைப்பு படை வீரர்களுக்கும் சென்னையில் பணி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. மதுரப்பாக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் அகாடமி அமைக்க அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
20 கோடி செலவில் நவீன தீயணைப்பு சாதனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன், ரோபோட் போன்ற நவீன கருவிகளை தீயணைப்புத் துறையில் பயன்படுத்த உள்ளோம். தீயணைப்பு துறையில்700 காலி பணியிடங்கள் உள்ளது. அவற்றை படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் அனைத்து சாதனங்களுடன் தயார் நிலையில் இருக்கிறோம்.
வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தப் பகுதிகளிலேயே சோதனை பயிற்சி நிறைவு செய்துள்ளோம். மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.