சென்னை: வேளச்சேரி பிரதான சாலை, கைவேலி மேம்பாலம் அருகில் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலையில் புதியதாக கட்டப்பட்டு வந்த வணிகக் கட்டிடத்தில், உள் அலங்கார பணி நேற்று (செப்.13) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை தீடீரென மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை பார்த்து வந்த நிலையில் தீப்பற்றி அதிக புகை வெளியானது. இதனை அடுத்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு அனைவரும் வெளியேறினர். உடனடியாக அருகில் உள்ள துணிக்கடையில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த ஊழியர்கள் முயன்றனர்.
அதன் தொடர்ச்சியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர், மேடவாக்கம், அசோக் நகர், துரைப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
மேலும், உயரமான கட்டடம் என்பதால் 'ஸ்கை லிப்ட்' வாகனம் வரவழைக்கப்பட்டு கட்டடம் முழுவதும் ஏறி தீயை கண்காணித்து அணைத்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட புகையை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுப்படுத்தினர்.
இந்த தீவிபத்தில் நல்வாய்ப்பாக எந்த ஊயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், இந்த கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் தப்பிக்கும் முயற்சியில் கண்ணாடியை உடைத்த போது ஒருவருக்கு கை விரலில் சிறு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவ பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலமாக அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
இந்த தீவிபத்தினால் அதிகளவில் ஏற்பட்ட கரும்புகை, வேளச்சேரி பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு மிகுந்த சிறமத்திற்கு ஆளாகினர். மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அடுத்து, வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையிலான காவல்துறையினர் ரயில் நிலையம் செல்லும் பாதையை தடை செய்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, வாகன ஓட்டிகளை மற்றுப்பாதையில் சுற்றி அனுப்பியதன் மூலமாக போக்குவரத்தை சரி செய்தனர்.
இதன் இடையே, நிகழ்விடத்திற்கு அடையார் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும், இந்த கட்டிடம் 8 அடுக்குகளை கொண்டதாகவும் உணவகத்திற்காக கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்திற்கான உரிய காரணம் குறித்தும், பொருள் சேதம் குறித்தும் விரிவான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பனை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சக நண்பர்கள் கைது : நடந்தது என்ன?