சென்னை: விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்பட்டது.
கண்காணிப்புக் குழு ஆய்வு
ராயபுரம் மண்டலத்திற்கு இரண்டு குழுக்கள், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு இரண்டு குழுக்கள், அண்ணாநகர் மண்டலத்திற்கு இரண்டு குழுக்கள், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் என மொத்தம் ஒன்பது சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் காவல் துறை உதவியுடன் ஆய்வு செய்தனர்.
இதில் புரசைவாக்கம், தியாகராய நகர், ராயபுரம், பாடி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 64 கடைகளில் நேற்று (ஜூலை 11) மாலை 7 மணியளவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள், அங்காடிகள், தனி நபர்கள் ஆகியோர்களிடமிருந்து மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதித்த அலுவலர்கள்
விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் ஜுலை 10ஆம் தேதியன்று 3 லட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமும், நேற்று (ஜூலை 11) 2 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் என இரண்டு நாள்களில் மொத்தம் 5லட்சத்து 43ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 626 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு செய்து 40 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை 1 லட்சத்து 72ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: விதிகளைக் கடைப்பிடிக்காத 14 வங்கிகளுக்கு அபராதம்