சென்னை: தமிழ்நாடு அரசின் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி செயல்பாடுகள் குறித்த நிதிநிலை வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக. 9) வெளியிட்டார்.
126 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை, தலைமை செயலகத்தில் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால், அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள்
- ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.
- வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம்.
- உள்ளாட்சி தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- அரசிற்கு வர வேண்டிய பணம் யார் கைக்கு சென்றது, அரசாங்கத்தின் கைக்கு வராத பணம் பணக்காரர்களின் கையில் சேர்கிறது.
- சரியான வரியை சரியான நபர்களிடம் எடுத்து மருத்துவம், தொழிற்சாலை என வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
- வாழ்வதற்கு சிறந்த இடமாக சொல்லப்படும் சுவீடன், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகள் 30 சதவீத வரியை விதிக்கிறது.
- 2019 - 20-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.89 சதவீதமாகவே இருந்தது.
- பண மதிப்பிழப்பு, கரோனா காலத்தில் தமிழகத்தில் குறைவான பாதிப்பே ஏற்பட்டது.
- பொறுப்பான அரசு என்பது வளர்ச்சி, சமூக நீதிக்கு உதவ வேண்டும்.
- உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படும்.
- பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம்.
- பேரிடர்களால் பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன.
- கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப தலைக்கு ரூ.50,000 முறைகேடு ஆக உள்ளது.
- வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
- மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.
- குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் ரூ.2,890.26 கோடியாக உள்ளது.
- ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு.
- குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம்
இதையடுத்து மேலும் அவர் கூறியதாவது, “இந்த மோசமான நிதி நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தாண்டி வரும். அரசியலில் சக்தி, மேலாண்மையில் திறமை ஆகிய இரண்டும் சரியான அரசாங்கத்தை வழிநடத்தும்.
நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம்.
வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும்.
தி.மு.க. அரசு மக்களுடன் இணைந்து செயல்படும். தமிழ்நாடு பணக்கார மாநிலம். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகமான சொத்துக்கள் உள்ளன” என்றார்.