சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20ஆம் தேதி பொதுபட்ஜெட், 21ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. பின்னர் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிருஷ்ண முரளி, “கடையநல்லூரில் சார்நிலை கருவூலம் அமைக்க அரசு ஆவன செய்யுமா” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கடையநல்லூரில் புதிய சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக கருவூல கணக்கு ஆணையரகத்திடமிருந்து கருத்து வரப்பெற்று அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும் கருவூல கணக்குத் துறையின் மறுசீரமைப்பிற்கு பிறகு கடையநல்லூரில் புதிய சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதற்கு நன்றி தெரிவித்த உறுப்பினர் கிருஷ்ண முரளி, “வெகு விரைவாக சார்நிலை கருவூலம் அமைத்து தந்து வழிவகை செய்து தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், “நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையில் பல சீர்திருத்தங்கள் ஏற்கனவே செய்த பிறகும் இன்னும் பல நடவடிக்கைகள் உள்ளன.
நாளை மறுநாள் நிதிநிலை அறிக்கைக்கான மானிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கும்போது பல அறிவிப்புகள் இன்னும் வர இருக்கின்றன. அரசின் அனைத்து துறைகளும் ஆட்டோமேஷன் செய்யப்பட உள்ளது. எந்த அளவிற்கு ஆட்டோமேஷன் என்றால் ஆன்லைன், மொபைல் ஆப் எல்லாவற்றிலும் அரசை நேரடியாக மக்களும் பல அலுவலர்களும் பணியை நேரில் வராமலே செய்துகொள்ள முடியும் என்பதற்கு ஏற்கனவே அறிவித்ததற்கு மேல் இன்னும் சில மாற்றங்களை செய்து வருகிறோம்.
அரசாங்கத்திடம் இருந்து பெற வேண்டிய சேவையோ அல்லது அரசுக்குச் செலுத்த வேண்டிய நிதியையோ மிக சுலபமாக ஆன்லைன் மூலம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
அனைத்து மக்களும் ஆன்லைனை பயன்படுத்த முடியாது. அதற்காகத் தான் யாருக்கெல்லாம் பயன்படுத்த முடியவில்லையோ மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போல வீட்டிற்கு சென்று ஆன்லைன் சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
எனவே, புது மாடல் உருவாக்கிய பிறகு சார்நிலை கருவூலங்கள் எங்கெல்லாம் கூடுதலாக உள்ளதோ எங்கெல்லாம் குறைவாக உள்ளதோ அதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.