சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, கடந்த மாதம் 14ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்ட திமுகவினருடைய சொத்துப்பட்டியல் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்களையும் அண்ணாமலை வெளியிட்டார். அதில், ஒரு ஆடியோவில், முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் இருவரும் இணைந்து ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போல இருந்தது.
மற்றொரு ஆடியோவில், தமிழ்நாட்டை முதலமைச்சரின் மகனும், மருமகனும் மட்டுமே ஆள்வதாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போல பதிவாகியிருந்தது. ஆனால், இந்த இரண்டு ஆடியோக்களிலும் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்புத் தெரிவித்தார்.
அதேநேரம், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆடியோ விவகாரம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, பாஜகவினர் ஆளுநர் ரவியை சந்தித்தும், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தும் பிடிஆர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆடியோ விவகாரம் பூதாகரமான நிலையில், பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனப் பரலவாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(மே.1) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சரிடம் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் மூலம் ஆடியோ விவகாரத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: PTR TAPES: ஆடியோவுக்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர்