சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 19,92,198 ஆண்களும் 20,60,767 பெண்களும் இதரர் 1,073 என மொத்தம் 40,54,038 வாக்காளர்களும் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு:
வாக்காளர் பட்டியல் வெளியிட்டப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ககன் தீப் சிங் பேடி,
"வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரைப் பெறப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்டப் படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்குப் பின்னர் சட்டப்பேரவைத் தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால், படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்புக் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
ஏற்பளிப்புச் செய்யப்பட்டப் படிவங்களின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டிற்கானத் துணைப் பட்டியல்களுடனான இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அத்துணை பட்டியல்களுடனான இறுதிப்பட்டியல் இன்று (05.01.2022) வெளியிடப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதித் திருத்தப்பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினைவிட 26,540 கூடுதலாக உள்ளது.
இந்த எண்ணிக்கை, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை விட 0.65 விழுக்காடு அதிகம்.
தேர்தல் முன்னர் வரை பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்:
இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் எண்ணிக்கை 43,132.
வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக ’எண்:18 துறைமுகம்’ சட்டப்பேரவைத் தொகுதியில் 1,78,665 வாக்காளர்களும், அதிகபட்சமாக ’எண்:26 வேளச்சேரி’ சட்டப்பேரவைத் தொகுதியில் 3,17,349 வாக்காளர்களும் உள்ளனர்.
16 தொகுதிகளிலும் சேர்த்து 40,80,578 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குவது போன்ற செயல்களைச் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு 2018ல் எடுக்கப்பட்ட 200 வார்டுகளின் மறுவரையறையே பின்பற்றப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாத்தூர் பட்டாசு விபத்து: தொழிற்சாலையின் கோர காட்சிகள்