சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேமராக்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் அருணகிரி என்பவர் 20 ஆண்டுகளாக சாந்தி என்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோ நடத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (செப்.5) தனது போட்டோ ஸ்டுடியோவை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று (செப்.6) காலையில் போட்டோ ஸ்டுடியோ திறந்துகிடப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்கள் அருணகிரிக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
உரிமையாளர் உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு திறந்து கிடைப்பதையும், கடையின் உள்ளே இரண்டு கேமராக்கள், கணினியில் பயன்படுத்தக்கூடிய ஒரு வன்தட்டு (ஹார்ட் டிஸ்க்), கேமராவிற்குப் பயன்படுத்தக்கூடிய லென்சுகள், கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ராயபுரம் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் அடிப்படையில் வந்த என்.1 ராயபுரம் காவல் துறையினர் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர்.