சென்னை: இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், "தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த முத்துக்கிருஷ்ணன், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகரில் மிகுந்த தொய்வோடு நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், பணிகள் முடியும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் படியும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தும் தமிழ்நாடு அரசு காட்டிய அலட்சியத்தால், இன்று முத்துக்கிருஷ்ணனை இழந்திருக்கிறோம்.
இனிமேலும் உயிர் பலிகள் ஏற்படாத அளவுக்கு இனியாவது தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மறைந்த செய்தியாளர் முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது.
அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தி தொலைக்காட்சி ஊழியர் பலி; முதலமைச்சர் இரங்கல்