சென்னை: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில், நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் (நவ.7) நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த மாவட்டமான திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் உள்ள வீடு, அதே பகுதியில் உள்ள அருணை கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியவர்களின் இல்லங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை மேற்கொள்ளும் போது கிடைக்கக்கூடிய ஆவணங்களின் அடிப்படையில், சோதனை செய்யப்படும் இடங்களின் எண்ணிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகின்றனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாகச் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (நவ.6) வரை அமைச்சர் எ.வ.வேலுக்குத் தொடர்புடைய இடங்களில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 18 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேலும் தற்போது நடைபெற்று வரும் சோதனையில் 4 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட இருப்பதாகவும், அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமான கரூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டிலிருந்து, சுமார் ஒரு கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றp பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இதுவரை சுமார் 22 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கல்வி நிறுவனங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் முறைகேடாக மறைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நீடித்துள்ளனர். இந்த சோதனையானது இன்று மாலையுடன் நிறைவு பெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.