சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர்த்து, பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை வசூல்செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தியும் கோரிக்கைவிடுத்து மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. பழைய கட்டண நிலுவைகளை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். அதுமட்டுமன்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் தேர்வினை நடத்தினால் முழுக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்கள் தருவோம் என மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசு தங்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணையின்படி தேர்வு எழுத அனுமதிக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.