சென்னை ஐஐடியில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் நவம்பர் 8ஆம் தேதி, ஐஐடி வளாகத்தின் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், பேராசிரியர்கள் சிலர் அளித்த மத ரீதியான துன்புறுத்தலால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும், ஃபாத்திமா தன் செல்ஃபோனில் குறிப்பு எழுதி வைத்துள்ளதால், தனது மகளது தற்கொலையில் மர்மம் இருப்பது குறித்து விசாரிக்க தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை இயக்குநர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரிடம் புகாரளித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐஐடி மாணவியின் மரணத்தின் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறை தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சங்கத்தினர், 'ஐஐடி மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற வருகிறது. இதற்கு ஆதரவாக எம்.பி.கள் குரல் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகம் பின்பற்றுவது இல்லை. ஐஐடி வளாகத்தில் ஏற்படும் மரணங்கள் தற்கொலை தொடர்கதை ஆகி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மரணங்கள் குறித்து விசாரிக்கத் தனி குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்' என்றனர்.
இதையும் படிங்க: 'ஃபாத்திமா லத்தீப் சமூகத்தின் அறிவாளி' - வழக்கறிஞர் அருள்மொழி