கரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானங்களைத் திறப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில், “தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) கட்டுப்பாட்டின்கீழ் விளையாட்டு மைதானங்களைத் திறப்பதற்கான வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
* விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில் திரவ சோப்பு, சானிடைசர்கள் கை கழுவ வழங்கப்பட வேண்டும்.
* உடல் வெப்பநிலைக்கு வெப்பநிலைமானி கொண்டு பரிசோதித்தப் பிறகு மக்கள் விளையாட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
* முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
*விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
*சம்பந்தப்பட்ட விளையாட்டு அரங்க அலுவலர்களும் பயிற்சியாளர்களும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தின் திறனையும் மதிப்பிடுவார்கள், தகுந்த இடைவெளியைப் பாராமரிக்க ஆரம்பத்தில் 100 உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், மண்டலங்களிலிருந்து வருபவர்கள், விளையாட்டு மைதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
*மக்கள் தங்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசாமல், அவர்களுடனேயே எடுத்துச் செல்ல வேண்டும்.
*விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிப்பறைகளை தவறாமல் சரியான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
விளையாட்டு அரங்கத்திற்குள் பொது மக்களை குழுக்களாக உள்ளே செல்ல அனுமதிக்கக்கூடாது. டோக்கன்கள் வழங்குவதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.
*விளையாட்டு மைதானத்திற்குள் தகுந்த இடைவெளியை பராமரிக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்
*குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்டி, அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், விளையாட்டு மைதானத்தில் உள்ள குப்பைத்தொட்டிகளில் இருந்து கழிவுகள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
*விளையாட்டு மைதான வளாகத்திற்குள் சிற்றுண்டி, துரித உணவு போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது.
*பராமரிப்பு ஊழியர்கள், தொழிலாளர்கள் முகக்கவசங்கள், கையுறைகள், கால் உறைகள் போன்றவற்றை பாதுகாப்பு கருதி அணிய வேண்டும்.
*தகுந்த இடைவெளியைப் பராமரித்தல், முகக்கவசம் அணிவது, கைகளை வழக்கமாக சுத்தப்படுத்துதல், எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது போன்ற தகவல்களை விளையாட்டு மைதானத்தில் நிர்ணயிக்கும் தகவல் பலகைகளை வழங்க வேண்டும்.
*விளையாட்டு மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் உடல் தகுதி, உடற்பயிற்சி செய்யும்போது பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
*65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நோயாளிகள், கர்ப்பிணிக்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உடல் தகுதி மற்றும் உடற்பயிற்சியைச் செய்வதற்கு விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.