விவசாயப் பொருள்களுக்கான விலையை விவசாயிகளும் நிறுவனங்களுமே தீர்மானிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த சாகுபடி சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் பேசுகையில், "விவசாயப் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் ஒப்பந்தத்தில் விவசாயிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுமே முடிவு செய்துகொள்ளலாம் என வேளாண் ஒப்பந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாய உற்பத்திக்கான விலையை தீர்மானிப்பதிலிருந்து அரசு விலகுகிறது என்பது தெளிவாகிறது. ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கிடைக்காதபோது அதனைப் பெற்றுத் தரவே அலுவலர்கள் தலையிடுவர் என அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில்தான் பொருள்களின் விலையை நிர்ணயிப்பர். இதனால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க இந்தச் சட்டம் உதவாது. அதேநேரத்தில், இடைத்தரகர்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் நலன்களையே இந்தச் சட்டம் பாதுகாக்கும்.
ஒப்பந்தத்தின்படி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய வற்புறுத்துவார்கள். இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்படும். உணவு தானியங்களுக்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க தமிழ்நாடு அரசு புதிய சட்டம்!