சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றபேரவை விதி எண் 110இன்கீழ் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் நவம்பர் 1ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
வரும் 1ஆம் தேதி, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு கிராமப்பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படும். இதில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்று பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"ஆளுநர் ஆளுநராக செயல்படுவது நல்லது" - திருநாவுக்கரசர்