மத்திய அரசால் விரைவில் கொண்டுவரப்பட உள்ள மின்சாரத் திருத்த சட்டம் 2020ஐ ரத்து செய்ய சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு, மலை தோட்டப் பகுதி விவசாயிகள் சங்கம், இயற்கை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர் ஒன்றிணைந்து தமிழ்நாடு மின் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் விக்ரம் கபூர், விவசாயத் துறை முதன்மை செயலர் ககந்தீப் சிங் பேடி ஆகியோரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.
இதில், “விவசாயிகளுக்கான இலவச மின்சார பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், இலவச மின்சார உரிமையை தொடர்ந்து காப்பாற்றிட வேண்டும். மின்சார இணைப்பு வேண்டி ஏற்கனவே பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
மத்திய அரசு இந்திய மின்சார திருத்த மசோதா எனும் ஒன்றைக் கொண்டு வந்து, அதன் மீதான கருத்தை மாநிலங்கள் பதிவு செய்வதற்காக ஜூன் இரண்டாம் தேதிவரை காலக்கெடு விதித்திருந்தது. இந்த மசோதாவில் மிக முக்கியமானது இந்திய மின்சார சட்டப்பிரிவு 63, 65 ஆகியவற்றில் முன்மொழிந்துள்ள திருத்தங்கள்.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள், ஏழைகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் ஆகியோர் அனைவருக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படும். இலவசமாக வீட்டு மின்சாரம் பெறும் நுகர்வோருக்கும் தமிழ்நாடு அரசு மானியம் கொடுப்பதில் மாபெரும் சிக்கல் ஏற்படும்.
அதுமட்டுமின்றி, மின் விநியோக நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து மின்சார உபயோகக் கட்டணத்தை நேரடியாக வசூலித்துக்கொள்ளும் அதிகாரத்தையும் இச்சட்டம் வழங்குகிறது. இத்தகைய காரணங்களால் மின்சார திருத்த சட்டம் 2020ஐ ரத்து செய்ய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்
ஒருவேளை தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கிடையே மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்பட்சத்தில், சுயமரியாதைத் திருமணங்கள் குறித்து இந்து திருமண சட்டம், பிரிவு 7இல் சேர்த்தது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 2017இல் திருத்தச் சட்டம் இயற்றியது ஆகியவற்றைப் போலவே, நமது சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டில் இலவச மின்சாரத் திட்டம் எந்தவித பாதிப்புகளுமின்றி தொடர தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம்