சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், வயல்வெளிகள் குளம் போல காட்சியளித்து தண்ணீரில் மிதக்கிறது.
குறிப்பாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், டெல்டா பாசனமில்லாத மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக இரவு பகலாக கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஒரு சில மாவட்டங்களில் நடவை முடிவடைந்து வளரும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ள நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பயிர்களை மூழ்கடித்துள்ளது. சில மாவட்டங்களில், அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாரான நிலையில், இந்த கனமழையின் காரணமாக, மறுபடியும் முளைக்கத் தொடங்கிவிட்டது.
இந்த கனமழை, தோட்டப்பயிர்களையும் விட்டு வைக்கவில்லை. பல மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயறு, வாழை, மக்கா சோளம், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவை அறுவடைக்குத் தயாராக இருந்தது. ஆயினும், மழைக்கு இந்த பயிர்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இன்னும் சில நாள்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கினால், வாழைகளும் அழுகி சேதம் அடையும் சூழல் இருக்கிறது என்பது விவசாயிகளின் குமுறலாக இருக்கிறது.
மழைநீர் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீடு தொகை வழங்கவும், மீண்டும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வட்டி இல்லா கடன் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவர் புயல், தொடர் மழை ஆகியவையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால், ஜனவரி மாத மழையின் பாதிப்பை மதிப்பீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, நிவர், புரவி புயலினால் டெல்டா மாவட்டங்களில் 7 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பானது என்றும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் தண்ணீரினால் சூழப்பட்டுள்ளது என்றும் வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருச்சி மாவட்டச் செயலாளர், அயிலை சிவசூரியன் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் ஏறக்குறைய 16 லட்சம் ஏக்கரில் நெற்பயிர், மானாவரி பயிறு வகைகள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் விவசாயிகள் கரோனா பெருந்தொற்றால், நெல் விலை வீழ்ச்சி கொண்டது.
இந்த நிலையில், இந்த வருடம் எல்லா வகையான பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அரசு இதை கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பயிர்களை மதிப்பீடு செய்து, ஏக்கருக்கு குறைந்தபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்," எனத் தெரிவித்தார். மேலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், விவசாயிகளின் உற்பத்தியை, ஈரப்பதம் அதிகம் என்று தட்டிக்கழிக்காமல், நல்ல விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இது குறித்து பாரதிய கிசான் சங்கம் மாநில செய்தித் தொடர்பாளர் N. வீரசேகரன் கூறுகையில், ‘இந்த ஜனவரி மாத மழையினால் பயிர்கள் மட்டுமல்ல, பூக்கள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டின் தொகையையும் உயர்த்த வேண்டும்” என்றார்.
இது குறித்து, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தொலைபேசி வாயிலாக கூறுகையில், “வருவாய் நிர்வாக ஆணையம் ஏற்கனவே பயிர் சேதாரம் குறித்து மதிப்பீடு செய்யத் தொடங்கிவிட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களின் வேளாண் துறை அலுவலர்களும், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யுமாறு அறிவுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆய்வு மேற்கொண்ட பின்புதான், பாதிப்பு பற்றிய முழு தகவல் தெரியவரும்” என்றார்.
வழக்கமாக வடகிழக்குப் பருவமழை டிசம்பர் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் முடிவடையும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, ஜனவரி மாதம் 17ஆம் தேதி நிலவரப்படி, 137.6 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக, ஜனவரி மாதத்தில் சராசரியாக, 12.7 மிமீ அளவுதான் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மன்னார்குடியில் கனமழை காரணமாக நெல் பயிர்கள் சேதம்!