மதுரவாயலைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சண்முகம் (28). இவர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குற்றச் செயல்களில் ஈடுபடாமல், தச்சு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று (மார்ச்2) வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினார்கள்.
இந்நிலையில், சண்முகம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, அங்கிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால், சண்முகத்தை விடாமல் துரத்திச் சென்ற அக்கும்பல் ஓட, ஓட வெட்டிப் படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து தகவலறிந்த காவலர்கள், சண்முகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே சண்முகத்தின் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதால் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? எனக் காவலர்கள் விசாரித்து, தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : தேர்தல் உலா 2021: நட்சத்திரத் தொகுதிகள் - எடப்பாடி