சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் என்கிற படப்பை குணா. ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன உரிமையாளரை, ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம்பறிப்பது போன்ற பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட புகார் உள்ளது.
மேலும் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்பட 42 வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் ரவுடி படப்பை குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ரவுடி படப்பை குணாவை பிடிக்க என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான டி.எஸ்.பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படை சமீபத்தில் அமைக்கப்பட்டது.
என்கவுன்ட்டர் செய்ய திட்டம்
இதற்கிடையே குணாவின் மனைவி எல்லம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில் காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது விசாரணைக்கு வரும் போது, என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து படப்பை குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குள்பட்டு நடத்தப்படுவார் என வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில் பல வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி படப்பை குணா இன்று சைதாப்பேட்டை 17ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து சரணடைந்த ரவுடி படப்பை குணாவை வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க 17ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
குறிப்பாக புழல் சிறையில் பாதுகாப்பு காரணங்களை கருதி சிறைத்துறை டிஐஜி ஆலோசனையின்படி பூந்தமல்லி சிறையில் பிரபல ரவுடி குணாவை அடைக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இருந்து பூந்தமல்லி கிளைக்கு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அடுத்தபடியாக நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி படப்பை குணாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான மனுதாக்கலை விரைவில் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயர்வு- தமிழ்நாடு அரசு