தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதன்முறையாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நபர் மூலம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 30 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மேலும் சில செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் குணமடைந்த செய்தியாளர்கள், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் 39 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஊரடங்கு அறிவித்தவுடன் சென்னையில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் சென்னை அலுவலகத்தில் தங்கி பணி புரிபவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படாமல் பணி செய்து வந்தனர்.
ஆனால், கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்த ஒருவரின் மூலம் சாதாரண அறிகுறியுடன் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அவர் மூலம் அலுவலகத்தின் 39 ஊழியர்களுக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, அனைவரையும் தனியார் மருத்துவமனையில் வைத்து நிர்வாகத்தின் செலவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.