திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் கடந்த 21ஆம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் திமுக தேர்தல் அறிக்கையில், "சாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்னுரிமை இருப்பதைப் போல வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி மூன்று லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனைப் பற்றி பெண் ஒருவர் அவதூறாகவும் ஒவ்வொரு சாதி பெயர்களைக் குறிப்பிட்டும் தவறாகப் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேண்டுமென்றே திமுக சொல்லாததை மாற்றி அவதூறாகப் பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னதாக திமுக புகார் அளித்தது.
இப்புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதியிடம் அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, புகாரை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் இந்திய தண்டனை சட்டம் 153 (ஏ)- சாதி, மத, இனம் தொடர்பான விரோத உணர்ச்சியைத் தூண்டுதல் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பேசிய பெண் யார் என்பது தெரியவில்லை என்றும், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜெ பி நட்டா இன்று பரப்புரை