சென்னை: நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு நேற்று முந்தினம் ஒருவர் வந்துள்ளார். பின்னர் தன்னை ரவீந்திரகுமார் என அறிமுகம் செய்து கொண்ட அவர், தான் ஊடகத்தில் பணிபுரிவதாகக் கூறி, இணை ஆணையர் மெர்சி சரண்யாவை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் அலுவலரின் அறைக்குச் சென்ற ரவீந்திர குமார், தனக்கு தெரிந்த நிறுவனத்தின் 3 கண்டெய்னர்களை விடுவிக்குமாறு மிரட்டியுள்ளார்.
ரிப்போட்டர் போல் நடித்த ’ரப்பர் குமார்’: இதனையடுத்து, சந்தேகமடைந்த அந்தப் பெண் அலுவலர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இணை ஆணையரை மிரட்டிய ரவீந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அந்த நபர் போலி நிருபர் என்பது தெரியவந்தது. மேலும், இவரிடம் நடத்திய விசாரணையில், ராயபுரம் பகுதியை சேர்ந்தவரான ரவீந்திரகுமார் என்கிற ரப்பர் குமார் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், ரவீந்திரகுமார் மீது அரசு அலுவலர்களிடம் மோசடி செய்ததாகக் கடந்த 2006ஆம் ஆண்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், திருவொற்றியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் கண்டெய்னர்களை கைமாற்றி விடும் புரோக்கராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து வணிகவரித்துறை பெண் அலுவலரை மிரட்டியதின் அடிப்படையில் ரவீந்திரகுமார் மீது கொலை மிரட்டல், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்திரகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.