தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிக அளவில் போலி கடவுச்சீட்டு மூலம் சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றாதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை சுங்கத்துறையினர் பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் க்யூ பிரிவு காவல் துறையினர் இந்த வழக்கை தனியாக விசாரித்துவருகின்றனர். இதில் தொடர்புடைய 40 பேரை பிடித்து விசாரணைநடத்தினர். இதில் திருச்சியைச் சேர்ந்த கலையரசி என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டது க்யூ பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்தது.
அவருக்கு உதவியாக திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செயல்பட்டது அம்பலமானது. போலி கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு கிருபா, நிமலன், உதயகுமார் உள்ளிட்ட நான்கு பேர் உட்பட இலங்கையைச் சேர்ந்த 13 பேரை க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போலி கடவுச்சீட்டு மூலம் இதுவரைக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளி நாடுகளுக்கும் சென்றுள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து இவர்கள் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஷாகுல் அமீது, கே.கே.நகரைச் சேர்ந்த சின்னையா ஆகிய இருவரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு மட்டும் போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுப்பதாகவும் ஒரு கடவுச்சீட்டு ஒரு லட்ச ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களையும் காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், சுங்கத் துறையினர் என பலர் பின்னணியில் உள்ளதாக க்யூ பிரிவு காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.