சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் யானை தந்தம் விற்கும் கும்பல் பதுங்கியிருப்பதாக நேற்றிரவு ரோந்துப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான காவல் துறையினர், எழும்பூர் கென்னட் சாலையிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றனர். அங்கு, 211, 213 ஆகிய அறைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது திருச்சியைச் சேர்ந்த வரதராஜ பெருமாள், பாபு, திருப்பதி, பூவரசன் ஆகிய நான்கு பேர், யானை தந்தம் போன்ற இரண்டு பொருள்கள் வைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, தந்தம் மாதிரியை பறிமுதல்செய்த காவல் துறையினர், அதனை வேளச்சேரி வனத் துறை அலுவலர்களிடம் காண்பித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வில், அது போலி தந்தங்கள் என வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அதனை எழும்பூர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிடிபட்ட நான்கு பேரிடமும் காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், போலி யானை தந்தங்களை வைத்து பண மோசடியில் ஈடுபட முயன்றார்களா? என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் செல்ஃபோன் பறிப்பு - இருவர் கைது