2018ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் தர்மன், தனது தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆய்வாளர் விடுமுறை தராததால், தனது ஆதங்கத்தை வாக்கி டாக்கி மூலமாக சக காவலருக்குத் தெரியும்படி தர்மன் பேசியுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன், தர்மன் போதையில் பேசியதாக கூறி புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, டி.டி.கே சாலையில் போக்குவரத்து பணியில் இருந்த ரவிச்சந்திரன், அதே வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் தர்மனை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்த முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி காவலர் சாலையில் கீழே விழும் வீடியோ காட்சி ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளியானது.
இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரன், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் காவலர் தர்மன் மது அருந்தியதாக போலியாக புகார் அளித்து தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.