சென்னை அடுத்த தாம்பரத்தில் பிரபல பெருங்காயத்தூள் (எல்.ஜி., கூட்டு பெருங்காயம்) நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பெயரில், போலி பெருங்காயத்தூள் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக, அந்நிறுவன அலுவலர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில், புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஆணையரின் உத்தரவின்பேரில் தாம்பரம் காவல் துறையினர், தாம்பரம் பகுதியிலுள்ள கடைகளில் சோதனை செய்தனர். கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம் பகுதிகளில் நடந்த சோதனையில், ஜான் (33), இமானுவேல் ஞானசேகரன் (45) ஆகியோர்களின் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் அளவுள்ள, 115 போலி பெருங்காய டப்பாக்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பீர்க்கன்காரணை, குறிஞ்சி தெரு, குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், செந்தில்குமார், (36), ராஜேந்திரன் (53) ஆகியோர்களின் கடைகளிலிருந்து வைத்திருந்த 50 கிராம் அளவுள்ள, 160 பெருங்காய டப்பாக்களை பறிமுதல் செய்தனர்.
14 கிலோ போலி பெருங்காயத்தூள் டப்பாக்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடை உரிமையாளர்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் முக்கிய குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர்: கிளினிக்கிற்கு சீல் வைத்த வருவாய் அலுவலர்கள் !