ஆன்லைன் விற்பனை இணையதளமான OLX-இல் பிரமிள் குமார் என்பவர் தான் பல்லாவரம் ராணுவத்தில் வேலை பார்ப்பதாகவும் தான் பணியிட மாறுதல் ஆகி வேறு மாநிலத்திற்குச் செல்ல இருப்பதால்தான் பயன்படுத்திய ராணுவ நான்கு சக்கர வாகனத்தை விற்க இருப்பதாகவும் விளம்பரம் செய்திருக்கிறார்.
இதனைப் பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் ராணுவ வாகனம் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவரைத் தொடர்பு கொண்டு இருக்கிறார்.
மேலும் விபரங்களை பாலமுருகன் கேட்கும்பொழுது தான் ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதற்காக உறுதி செய்வதற்காக பிரமிள்குமார், ராணுவ அடையாள அட்டை மற்றும் இராணுவ சீருடையுடன் கையில் துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
இதையெல்லாம் பார்த்த பாலமுருகன் அவர் உண்மையான ராணுவ அதிகாரி என்று நம்பி முதல் தவணை தொகையாக இரவு 11 மணியளவில் ராணுவ வீரர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ. 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்.
மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன், அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்குச் சென்றது என்பதை பாலமுருகன் தன்னுடைய நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார்.
நண்பரின் செல்போன் எண்ணிலிருந்து அதே பிரமிள்குமார் என்ற போலி ராணுவ அதிகாரியை OLX மூலம் தொடர்புகொண்டபோது, தனக்கு அனுப்பிய அதே அடையாள அட்டைகளை இந்த எண்களுக்கும் அனுப்பியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் இவர் தான் மோசடியாக செயல்படுகிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பாலமுருகன், இதே பிரமிள் குமரால் 8க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களும் என்னைப்போலவே காவல் ஆணையரிடமும் ராணுவ தலைமை அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு!